சென்னை: சென்னை மாநகராட்சிக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஆர்ப்பாட்டம் சென்னை ரிப்பன் பில்டிங் அருகே நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், "அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்த போலீசார் ஒத்துழைக்க வேண்டும். எங்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் தயங்க மாட்டோம். மக்கள் பிரச்னைக்காக போராடும் பொழுது தீவிரம் காட்டும் போலீசார், மற்ற விஷயங்களில் தீவிரம் காட்டினால் நன்றாக இருக்கும்.
இங்கு யாரும் பயங்கரவாதி கிடையாது, போதைப்பொருட்கள் விற்பவர்கள் கிடையாது. எனவே, நாங்கள் ஆர்ப்பாட்டத்தை அமைதியாக நடத்தி முடித்த பின் நீங்கள் கைது செய்து கொள்ளுங்கள். போலீசாரின் போக்கு நல்லதல்ல. காவல்துறை தவறு செய்யும் பொழுது தட்டிக் கேட்க தயங்காதவர்கள் நாங்கள்.
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தனியாருக்கு கொடுத்து விட்டால், ஒப்பந்ததாரர்களுக்கு தான் லாபம் கிடைக்கும். தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவதால் சுகாதாரம் பாதிக்காதா? தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.
மின்சார விநியோகம், தூய்மைப்பணி, குடிநீர் விநியோகம் என அனைத்தையும் காண்ட்ராக்ட்-க்கு விடுகிறீர்கள். ரிப்பன் கட்டிடத்தை காண்ட்ராக்ட்க்கு விட்டுவிடுங்கள், மாமன்ற மேயரையும் ஒரு ஒப்பந்த தொழிலாளியாக வைத்து விடுங்கள். பாஜகவின் தனியார் மயமாக்கும் கொள்கையை சென்னை மாமன்றம் நிறைவேற்றக் கூடாது என முதலமைச்சரை வலியுறுத்துகிறோம். நாம் சமூக நீதி பேசி வரும் சூழலில், தனியார் மயமாக்கப்பட்டால் அதில் எப்படி சமூக நீதி இருக்கும்?