மக்களை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என மோடி நினைப்பது பகல் கனவு நீலகிரி:பத்தாண்டுக் காலமாகக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை, என இன்று (ஏப்.14) செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று தீவிர பிரச்சாரம் மற்றும் பேரணி நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பவானிசாகர் முன்னாள் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு இந்தியா கூட்டணியின் வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
முன்னதாக சத்தியமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள், அணிவகுத்து பேரணியாகப் புறப்பட்டு சத்தியமங்கலம் பஸ் நிலையம், மைசூர் ட்ரங்க் ரோடு, ஆற்றுப்பாலம், மணிக்கூண்டு, சத்யா தியேட்டர் ரோடு, திப்பு சுல்தான் ரோடு வழியாக வடக்கு பேட்டை சந்தைக்கடை பகுதியை வந்தடைந்தது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், "காலம் கடந்து, அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இருந்தும் கொஞ்சம் எடுத்து பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2014 ல் மோடி கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த தேர்தல் அறிக்கையில் கருப்புப் பணத்தை மீட்டு பொதுமக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவேன்.
இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பேன், தமிழக மீனவர்களின் நலன் காப்பேன் என ஏற்கனவே அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது. இந்த தேர்தல் அறிக்கையினால் எந்த பயனும் இல்லை. மக்களை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என மோடி கனவு காண்பது பகல் கனவு.
ராமரைக் காட்டி தேர்தலில் வெற்றி பெற முடியாது, பத்தாண்டுகளில் ஏழைகளைப் பற்றி கவலைப்படவில்லை, விவசாயிகளைப் பற்றி கவலைப்படவில்லை, தொழிலாளர்களைப் பற்றி கவலைப்படவில்லை, விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரான சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்கள், பாஜகவின் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப மாட்டார்கள்", என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தபால் வாக்குகள் ஏப்.16 ஆம் தேதிக்குள் செலுத்த ஜாக்டோ ஜியோ அறிவிப்பு! - Lok Sabha Election 2024