திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பொன்னூர் ஏரியில் தினந்தோறும் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து வந்து செல்வது வழக்கமாக வைத்துள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாக பொன்னூர் கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் வாழும் காட்டுப்பன்றியைப் பிடிக்க வெடிவைத்த நிலையில், காட்டுப்பன்றி வாய் பகுதி கிழிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளது. காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்கு யாரோ மர்ம நபர்கள் காட்டுப் பகுதியில் வெடி மருந்துகளை வைத்ததாக பொதுமக்கள் புகார்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், பொன்னூர் கிராமத்தில் காட்டை ஒட்டிய ஏரி பகுதியில் ஆடு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திடீரென 11 மாடுகள், 5 ஆடுகள் இறந்து போனதாக கூறப்படுகிறது. அதில், நேற்று முன்தினம் மட்டும் இரண்டு பெரிய பசுக்களும் ஒரு கன்றுக் குட்டியும் என மூன்று மாடுகள் திடீரென ஒரே நாளில் இறந்த காரணத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மேலும், இது சம்பந்தமாக வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.