தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு..! யாரும் ஆஜராகாததால் விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி! - அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு

Anitha Radhakrishnan: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களை இணைத்து கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மார்ச் 22ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 2:14 PM IST

தூத்துக்குடி:கடந்த 2001 - 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக, 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலகட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கைத் தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விசாரித்து வரும் வேளையில், வழக்கில் தங்களையும் மனுதாரராக இணைக்கக் கோரி அமலாக்கத்துறை, கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையானது, 80 சதவீதம் முடிவடைந்துள்ளதால், இதில் அமலாக்கத்துறையை சேர்த்துக் கொள்ள முடியாது என லஞ்ச ஒழிப்புத் துறையினர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வர இருந்தது. நீதிபதி செல்வம் விடுப்பில் உள்ள காரணத்தால் மாவட்ட நீதிமன்ற (பொறுப்பு) நீதிபதி சுவாமிநாதன் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஆனால் இந்த வழக்கில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பிலும், அமலாக்கத்துறை தரப்பிலும் யாரும் ஆஜராகவில்லை. இதனால் வழக்கின் விசாரணையை மார்ச் 22ஆம் தேதிக்கு நீதிபதி சுவாமிநாதன் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:சர்வதேச மகளிர் தினம்: நீதித்துறையில் சாதித்த பெண்கள் கூறும் தாரக மந்திரம்!

ABOUT THE AUTHOR

...view details