திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. திமுக 4, 7 மற்றும் 8-வது வார்டு உறுப்பினர்களான வசந்தா, இந்திரா மற்றும் மேரி குமாரி ஆகிய மூன்று பேரும் தங்கள் பகுதியில் சீர்திருத்த பணிகளுக்கு ஒப்பந்தம் விடும் பணி நடைபெறாத காரணம் என்ன? மக்களுக்கும் மாமன்ற உறுப்பினர்களுக்கும் அல்வா கொடுப்பதற்கான காரணம் என்ன? என்ற வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியபடி கூட்டத்திற்கு வந்தனர்.
மேலும், அவர்கள் அல்வா மற்றும் குப்பைகளைத் தட்டுகளில் எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் தங்களது பகுதிகளில் எந்த சீர்திருத்தப் பணியும் நடைபெறவில்லை என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வழக்கமாகக் கூட்டம் தொடங்கியவுடன் தீர்மானங்களை முன்வைத்து பொருள் விளக்கத்தை மேயர் ஓரிரு வரியில் கூறி கூட்டத்தை நிறைவு செய்வார்.
தீர்மானம் மீது ஒரு சில கவுன்சிலர்கள் மட்டுமே தங்களது விமர்சனங்களை முன்வைப்பர். ஆனால் கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களின் பொருள் மீதும் தனித்தனியாக கவுன்சிலர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும் மக்கள் பிரச்சனைகளை கவுன்சிலர்கள் தனித்தனியாகப் பேசுவார்கள் அதற்குப் பதில் அளிக்க வேண்டும் என கவுன்சிலர் பவுல்ராஜ் கூறினார்.
சுமார் 5 மணி நேரம் வரை இந்த கூட்டம் நீடித்தது. வழக்கமாக இது போன்ற மாமன்ற கூட்டம் அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் முடிந்து விடும். ஆனால், இரவு 10:00 மணி வரை கூட்டம் நீடித்தது. ஒரு கட்டத்தில் மேயர், ஆணையர் உள்பட அனைவரும் சோர்வானதால் இடையில் கூட்டத்தை நிறுத்திவிட்டு தேநீர் அருந்தச் சென்றனர்.