தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே கொட்டையூரில் தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு வாரம் புதன்கிழமையும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஜூன் 12ஆம் தேதி முதல் கடந்த 4 வாரங்களாக நடைபெற்ற பருத்தி ஏலத்தில், பருத்தி கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், குவிண்டால் பருத்தி ரூ.6,500 முதல் ரூ.7,500 வரை ஏலம் போன நிலையில், நேற்று 5வது வாரமாக நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 3,400 குவிண்டால் பருத்தியுடன், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்திருந்தனர். ஆனால், நேற்றைய ஏலத்தில் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.4,500, அதிகபட்சமாக ரூ.6,500, சராசரியாக ரூ.5,500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
அதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், பருத்தி சாகுபடிக்கு நாளுக்கு நாள் உற்பத்திச் செலவு அதிகமாகி வரும் வேளையில், கட்டுப்படியாகும் போதிய விலை கிடைக்கவில்லை எனக் கூறி, ஒழுங்குமுறை விற்பனைக்கூட நுழைவு வாயில் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் கும்பகோணம் - திருவையாறு பிரதான சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.