தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதாள சாக்கடை குழிக்குள் தவறி விழுந்த தொழிலாளி.. இருசக்கர வாகனத்தை தேடும் பணி தீவிரம்!

திருப்பூரில் ஈஸ்வரன் கோயில் வீதி அருகே உள்ள பாதாள சாக்கடை குழிக்குள் டூவிலரில் சென்றவர் தவறி விழுந்ததில், டூவிலர் குழிக்குள் விழுந்த நிலையில், அதனை தேடும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதாள சாக்கடை விரிவுப்படுத்தும் பணி
பாதாள சாக்கடை விரிவுப்படுத்தும் பணி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2024, 10:55 PM IST

திருப்பூர் : திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்தது. திருப்பூர் தெற்கு தொகுதியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 9.6 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. நேற்று பெய்த கனமழையின் காரணமாக மாநகரின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்தது.

பல வஞ்சிபாளையம், ஜெயலலிதா நகர் அருகே உள்ள குடியிருப்பில் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

அதேபோல் முத்தையன் நகர், ஆனந்தா அவன்யூ உள்ளிட்ட பகுதிகளிலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும், பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று(அக் 16) அதிகாலை முதல் திருப்பூர் மாநகரம் முழுவதும் மழைநீரால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பொருட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையும் படிங்க :சென்னைவாசிகளுக்கு மழைக் காட்டிய பயம்; தி.நகர் கலைவாணர் மேம்பாலத்திலும் வரிசைக்கட்டி நிற்கும் கார்கள்!

இந்நிலையில், திருப்பூர் ஈஸ்வரன் கோயில் வீதியை அடுத்த ஸ்ரீ சக்தி திரையரங்கம் அருகே உள்ள பாதாள சாக்கடை நிரம்பி மழை நீரோடு, சாக்கடை நீரும் கலந்து சாலையில் சென்று கொண்டிருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

இருசக்கர வாகனத்தை தேடும் பணி (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியே வந்த செவந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனசேகரன் (40) தனது இருசக்கர வாகனத்துடன் பாதாள சாக்கடைக் குழிக்குள் விழுந்தார். இதனைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டனர்.

மேலும், அவரின் இருசக்கர வாகனம் 20 அடி ஆழமுள்ள பாதாள சாக்கடைக் குழிக்குள் விழுந்து. தொடர்ந்து ஜேசிபி வாகனம் மூலம் தண்ணீர் செல்லும் பாதை விரிவுபடுத்தப்பட்டு சாக்கடை நீரும், மழை நீரும் வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

வாகனத்தை மீட்டெடுக்கும் பணியில் மாநகராட்சியின் ரெக்கவரி வாகனம் கொண்டு வரப்பட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது‌. தண்ணீர் அதிக அளவில் இருந்ததன் காரணமாக வாகனத்தை தேடும் பணி நடைபெற்றது. அப்போது சம்பவ இடத்திற்கு திருப்பூர் எம்எல்ஏ செல்வராஜ், திமுக தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி நாகராஜன், எம்.பி பி.ஆர்.செந்தில்குமார், மாநகர உதவி காவல் ஆணையாளர் அணில் குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பணிகளை துரிதப்படுத்தினர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details