நீலகிரி:குன்னூர் அருகே உள்ளது ஜெகதளா பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 13வது வார்டு பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்யவில்லை என்று பொதுமக்கள் இன்று மாதாந்திரக் கூட்டம் நடைபெறும் நேரத்தில், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பேசிய அருவங்காடு கிராமவாசி சீதா, “தொடர்ந்து தமிழக அரசால் வழங்கப்படும் எந்தவித அடிப்படை வசதிகளும் எங்கள் பகுதிக்கு ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம் செய்து தரவில்லை. பேரூராட்சி தலைவரின் சொந்த வார்டு இது என்றாலும், இங்கு ஒரு வசதியும் இல்லாத நிலையே தொடர்ந்து வருகிறது” என்றார்.
மேலும், அவர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் இறங்கியதால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. பின் பேரூராட்சி அலுவலர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அனைத்து பணிகளையும் செய்து தருவதாக அலுவலர் ஒப்புதல் அளித்த நிலையில் பொதுமக்கள் அங்கிருந்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்திவிட்டு கலைந்து சென்றனர்.