ஈரோடு: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு தேவையான உயர் சிகிச்சைகள் அளிப்பதற்கு போதுமான வசதிகள் இல்லாததால், நோயாளிகள் சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு அனுப்பபட்டு வந்தனர்.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu) இதனையடுத்து ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் பல்நோக்கு மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையின் படி, 67.02 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டப்பட்டது.
இங்கு, நரம்பியல் பிரிவு, இருதய நோய் பிரிவு, கண் அறுவை சிகிச்சை, புற்றுநோய், பிளாஸ்டிக் சிகிச்சை, குழந்தைகள் நல அறுவை சிகிச்சை என பல்வேறு உயர் சிகிச்சைகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குறைபாடு காரணமாக உரிய சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தில் சுத்தம் செய்வதற்காக வரும் தூய்மை பணியாளர்கள், நோயாளிகளுக்கு பரிசோதனை செய்வது, ட்ரிப்ஸ் போடுவது போன்ற பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே மருத்துவமனையில் ஸ்டரச்சர் இல்லாததால் தாயை மகள் தூக்கிச் சென்ற விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், தற்போது அடுத்த கட்டமாக தூய்மை பணியாளர்கள் மருத்துவர்களாக மாறியுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய சுகாதாரத்துறை இணை இயக்குனர் அம்பிகா சண்முகம், "இது போன்ற சம்பவம் அரசு மருத்துவமனையில் நடைபெற்று இருக்காது, ஒப்பந்த சுகாதார பணியாளர்களுக்கு நோயாளிகளுக்கு டிரிப்ஸ் இறக்க அனுமதிப்பது இல்லை. இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், வீடியோ காட்சிகளை பார்த்த பிறகு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அம்பிகா சண்முகம், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்ததாக வெளியான வீடியோ அடிப்படையில் ஒப்பந்த தூய்மை பணியாளர் விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பெட்டியைத் திறந்தால் வெள்ளை நோட்டுகள்.. மோசடி கும்பலை சுற்றி வளைத்த ஈரோடு போலீசார்! - Fake Currency Note Gang Arrest