மதுரை:காயல்பட்டணத்தைச் சேர்ந்த மூஸா நைனா என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டணத்தில் கடந்த 97 வருட பாரம்பரியமிக்க மஜ்லிஸுல் புஹாரிஷ் ஷரீபு இஸ்லாமியர்களின் தொழுகை பள்ளிவாசல் உள்ளது.
இந்த பள்ளிவாசல் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டதாகும். இதன் நிர்வாக பொறுப்பாளர்கள் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட அந்த பகுதியைச் சார்ந்த பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்வகித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட குழுவினர் பாரம்பரியமாகத் தேர்ந்தெடுத்த முறையினை எதிர்த்து ரகசிய வாக்கு மூலம் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டி அப்பகுதியைச் சார்ந்த முகம்மது இஸ்மாயில் என்பவர் மூலம் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் மார்ச் 2023ஆம் ஆண்டு தனி நீதிபதி தேர்தல் நடத்த உத்தரவிட்டார். அதனை எதிர்த்து நிர்வாகிகள் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரணை செய்த நீதிபதிகள் பள்ளிவாசலுக்கு உட்பட்ட எல்கை வரையறை, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் போன்ற ஆட்சேபனையினை கருத்தில் கொண்டு தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து ஆட்சேபனைகள் அனைத்தையும் முறைப்படி விசாரணை செய்து சரி செய்த பின்னர் தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.
ஆனால், நீதிமன்ற உத்தரவைக் கருத்தில் கொள்ளாமல் வக்ஃபு வாரியம் கடந்த டிசம்பர் 2023 அன்று தேர்தல் நடத்தினர். எனவே நீதிமன்ற உத்தரவை முறையாகப் பின்பற்றாமல் தேர்தல் நடத்திய தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் அப்துர்ரஹ்மான், வக்ஃபு முதன்மை செயல் அலுவலர் ஜைய்னுல் ஆப்தீன், திருநெல்வேலி வக்ஃபு கண்காணிப்பாளர் ஷேக் அப்துல்லாஹ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார்.