மதுரை: மதுரை மாவட்டம், பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்குத் தமிழக அரசால் 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வீட்டிற்கான கட்டுமானப் பணிகள் இன்று(மார்ச்.11) துவக்கி வைக்கப்பட்டது.
சுய உதவிக்குழுக்களின் அடையாளமாகத் திகழும் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை, தனக்கென்று சொந்தமாக வீடு இல்லை எனவும், மோடி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டித் தருவதாகக் கூறி இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை கட்டித்தரவில்லை எனவும் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அண்மையில் பேட்டி அளித்திருந்தார்.
இதனையடுத்து, பத்மஸ்ரீ சின்னப்பிள்ளையின் பேட்டி தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னர் ஒதுக்கப்பட்ட 1 சென்ட் நிலத்துடன் மேலும் கூடுதலாக 380 சதுர அடி நிலமும் ஒதுக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் இந்த மாதமே துவங்கும் என அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை, தன்னுடைய நீண்ட நாள் கோரிக்கை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் மூலம் சாத்தியமானதாகத் தெரிவித்து, தமிழக முதலமைச்சருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மதுரை கிழக்கு வட்டாட்சியர் பழனிக்குமார் கடந்த மார்ச்.9ஆம் தேதி சின்னப்பிள்ளையை பில்லுசேரியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து வீடு ஒதுக்கீட்டிற்கான பட்டாவை வழங்கினார். மேலும் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதியில், ஜேசிபி இயந்திரம் கொண்டு சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் இன்று 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிக்கான ஆணை வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதில், மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா, மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:மாஸ்டர் சுரேஷ் டூ சூர்ய கிரண்.. ரஜினியின் சிறுவயது வாய்ப்பு கிடைத்தது எப்படி?