சென்னை: காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையின்படி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 16) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், தண்ணீரை விடுவித்திட ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை வலியுறுத்தியும், காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நாடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை வரவேற்பதாக அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது காவிரி. இந்த விவகாரத்தில், அரை நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டின் உரிமை பறிக்கப்படுகிறது. இது மிகப்பெரிய அநீதி. தமிழ்நாட்டின் பாசன பரப்பு குறைந்து கர்நாடகாவின் பாசன பரப்பு அதிகரித்துள்ளது. தேக்கி வைக்க முடியாத நிலையில், அணை நிரம்பிய பிறகுதான் தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு தண்ணீர் வழங்குகிறது. நாள் ஒன்றுக்கு மூன்று டிஎம்சி தண்ணீர் வழங்குவதற்காக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர வேண்டும்” என்றார்.
இதனையடுத்து பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “கர்நாடக அரசு, உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணைய தீர்ப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பிரதமர் மோடி இதில் தலையிட்டு, தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை தீர்ப்பின் அடிப்படையில், தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் காலம் கடத்த கூடாது. இதுவரை 38 முறை பேச்சு வார்த்தை நடந்துள்ளது. ஆனால், எந்த பயனும் இல்லாமல் உள்ளது. இந்த தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், “காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிடுவதற்கு வாய்ப்பில்லை. டெல்டா மாவட்டங்களில் உள்ள ஐந்து மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் உருவாக்கிய மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. காவிரி பிரச்சனையில் தமிழ்நாடு மக்களின் உரிமையை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு ஒன்றுபட்டடால், பாரதிய ஜனதா கட்சி துணை நிற்கும்” என்றார்.