சென்னை: தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து செல்வப்பெருந்தகை கூறியதாவது, “மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு அரசிடம் இருந்து ஆலயங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதை காங்கிரஸ் கண்டிக்கிறது. இறைவன் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். ஆலய வழிபாடு அனைவருக்கும் சொந்தமானது. பழைய ஆச்சாரங்கள் மற்றும் மனுநீதிகளை மீண்டும் திணிக்க முயற்சிக்கிறார்கள். ஒருபோதும் தமிழ்நாடு மக்கள் இதற்கு அனுமதிக்க மாட்டார்கள்.
இதையும் படிங்க:”என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே”- திமுக முப்பெரும் விழாவில் ஒலித்த கருணாநிதி குரல்! - karunanidhi speech in ai
காலங்காலமாக அடக்குமுறை, ஒடுக்குமுறை, ஆலய வழிபாடு உரிமை மறுக்கப்படுகிறது. இன்னும் பல பெரியார்கள் தேவைப்படுகிறார்கள். முதலமைச்சர் பிற்போக்குத் தனங்களை முறியடித்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு கடல் தாமரை மாநாடு கன்னியாகுமரி, ராமேஸ்வரத்தில் நடத்தினார்கள்.
அப்பொழுது மத்திய அமைச்சர் மோடி பிரதமரானால், ஒரு மீனவர்கள் கூட தாக்கப்பட மாட்டார்கள். இன்டர்நேஷனல் எல்லையில் போஸ்ட் கார்ட் நிறுத்தப்படும். ஒரு போதும் ஒரு தீங்கும் வராது, சிறை பிடிக்க மாட்டார்கள், படகுகளை பறிமுதல் செய்ய மாட்டார்கள் என உத்தரவாதம் கொடுத்தார். ஆனால், பத்து ஆண்டுகள் கடந்தும், குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஒரு நியாயம் உள்ளது. இதுதான் பாசிசம். தமிழ்நாட்டு மீனவர்களை முழுமையாக பாஜக புறக்கணிக்கிறது” இவ்வாறு அவர் கூறினார்.