தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"வாரிசு அரசியலை முன்வைக்க பாஜகவிற்கு தகுதியில்லை" - செல்வப்பெருந்தகை! - Selvaperunthagai - SELVAPERUNTHAGAI

ராஜ்நாத்சிங் மகன், அமித்ஷா மகன் என மொத்தம் 60 பாஜக தலைவர்களின் வாரிசுகள் நேரடி அரசியலில் உள்ளனர். எனவே, வாரிசு அரசியலை முன்வைக்க பாஜகவிற்கு தகுதியில்லை என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், செல்வப்பெருந்தகை
உதயநிதி ஸ்டாலின், செல்வப்பெருந்தகை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2024, 5:30 PM IST

சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இந்திரா தோழமை சக்தி இயக்க மாநில ஆலோசனைக் கூட்டம், காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது, “இந்திரா தோழமை சக்தி இயக்கம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவேறியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் அரசியல் அதிகாரத்திற்காக இந்திரா தோழமை சக்தி இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

தேர்தல் பத்திர விவரத்தை வெளியிட வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்த ஒரே கட்சி பாஜக தான். தற்போது கர்நாடகாவில் தேர்தல் பத்திரம் மூலம் மிரட்டி பணம் வாங்கப்பட்டதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவரைப் பார்த்து ஒரு விரல் நீட்டினால், தம்மை நோக்கி நான்கு விரல் இருக்கும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது” என்றார்.

இதையும் படிங்க:"வாரிசு அரசியலில் இல்லாதவர்கள் விமர்சிக்கட்டும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!

ஊழல் வழக்கில் சிறை சென்று வந்த செந்தில் பாலாஜியைக் கொண்டாடுவது வெட்கக்கேடானது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டிற்கு அவரும் ஒரு நாள் சிறை செல்லலாம். விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுக் கொடுங்கள். ஆனால், விசாரணை நடத்தாமல் வாழ்நாள் முழுவதும் சிறையில் வைப்பேன் எனக் கூறுவது எந்த அடிப்படையில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.

அரசியலில் பாஜக தலைவர்களின் வாரிசுகள்: வெறுப்பு அரசியலை ஒருபோதும் இந்திய மக்கள் வேடிக்கை பார்க்கமாட்டார்கள். எந்த அரசியல் கட்சியும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் யாராக இருந்தாலும், நாகரிக அரசியலை கடைபிடிக்க வேண்டும். தமிழகத்தின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.

வாரிசு அரசியலை முன்வைக்க பாஜகவிற்கு தகுதியில்லை. ராஜ்நாத் சிங் மகன், அமித்ஷா மகன் என மொத்தம் 60 பாஜக தலைவர்களின் வாரிசுகள் நேரடி அரசியலில் உள்ளனர். கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில் இந்தியாவில் சிறந்த குடும்பம் என பாராட்டு தெரிவித்த பாஜக இன்று ஏன் எதிர்வினையாற்றுகிறது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, சென்னை மாநகரின் முன்னாள் மேயர் சிவராஜின் 133வது பிறந்த நாளையொட்டி சென்னை, தண்டையார்பேட்டை தங்கசாலை பகுதியில் அமைத்துள்ள அவரது உருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவராஜின் உருவப்படத்திற்கு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “விளையாட்டுத் துறையில் இந்தியாவே கண்டிராத மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார் உதயநிதி ஸ்டாலின். இளைஞர்களை ஊக்குவித்து வாழ்த்த வேண்டும். எந்த காலத்திலும் ஆர்எஸ்எஸ் அதனை செய்யாது. அதனால் காழ்ப்புணர்வுடன் இதனை எதிர்க்கின்றனர். உதயநிதி துணை முதலமைச்சராவதை காங்கிரஸ் வரவேற்கிறது. ஆடம்பர, அலங்கார பேச்சுக்கு அப்பாற்பட்டு உதயநிதி அமைதியாக பணியாற்றுகிறார்.

குஜராத்தில் சபர்மதி ரயில் நிலையம் எரிப்பு, கோத்தா சம்பவம், கொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை அனைவரும் மறந்துவிட்டார்களா? இளைஞர்களை வாழ்த்த வேண்டும். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால், ஆர்எஸ்எஸ்-க்கு இவை பிடிக்காது. உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசுவதற்கு மோடிக்கு தகுதி கிடையாது” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details