திருநெல்வேலி: 18-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரே கட்டமாக ஏப்.19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி 7 முறை தமிழகம் வந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதராவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதே போல் இந்தியா கூட்டணி சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் தனது தேர்ட்ய்ஹல் பிரச்சாரத்தை தொடங்கி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று ஒரு நாள் சுற்று பயணமாக தமிழகம் வருகிறார்.
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். முன்னதாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலி பேடு தளத்தில் ராகுல் காந்தி சரியாக மாலை 3.30 மணிக்கு வந்து இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் சுமார் 500 மீ தூரத்தில் உள்ள பெல் மைதானத்தில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று பேசுகிறார்.
இதையொட்டி சாலையில் இருபுறமும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ராகுல் காந்தியை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் திறந்த காரில் நின்று படி பொதுமக்களை கையசைத்துவிட்டு நேராக மாலை 4 மணி அளவில் பிரச்சாரம் பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார்.
பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூஸ் (திருநெல்வேலி), ராணிஸ்ரீகுமார் (தென்காசி), சு.வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), கனிமொழி (தூத்துக்குடி), விஜய் வசந்த் (கன்னியாகுமரி), கார்த்திக் சிதம்பரம் (சிவகங்கை), நவாஸ்கனி (இராமநாதபுரம்) ஆகியோரை ஆதரித்து ராகுல்காந்தி பிரச்சாரம் செய்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் கோயமுத்தூர் செல்கிறார்.
பின்னர், கோயம்புத்தூரில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திலும் ராகுல் காந்தி பல்கேற்று பேசுகிறார். ராகுல்காந்தி வருகை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெறும் பெல் மைதானத்தை சுற்றி மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரின் பல்வேறு இடங்களில் பேரிகார்டர் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நெல்லை மாநகர் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
நேற்று ராகுல்காந்தி கான்வாய் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, ஆகியோர் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தை நேரில் பார்வையிட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி, இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற தலைவர்கள் தொடர்ச்சியாக பிரச்சாத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராகுல் காந்தியின் வருகையால் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:"சென்னை வெள்ளத்திற்குப் பிரதமரை அழைத்த முதலமைச்சர் வேங்கைவயலுக்கு ஏன் செல்லவில்லை" - ஹெச்.ராஜா கேள்வி - Lok Sabha Election 2024