விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கம்பந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் குமார். இவரது மனைவி திவ்யா (26) முதல் பிரசவத்திற்காக கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியன்று திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்ததுள்ளது. இதனை அடுத்து, அவருக்கு தொடர்ச்சியாக அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திவ்யாவிற்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள், சிறிது நேரத்தில் திவ்யா உயிரிழந்ததாகக் கூறியதாகவும். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவர்களிடம் கேட்ட போது, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை நீக்கப்பட்டதால் ரத்தப்போக்கு ஏற்பட்டு பெண் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, உறவினர்களுக்குக் கூட தெரியாமல் பெண்ணின் கர்ப்பப்பையை மருத்துவர்கள் நீக்கியுள்ளதாகவும், திண்டிவனம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் கவனக்குறைவு மற்றும் அலட்சியம் காரணமாகத் தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்டதால்தான் இளம்பெண் உயிர் இழந்ததாகவும் குற்றம் சாட்டிய உறவினர்கள், மருத்துவ நிர்வாகத்தைக் கண்டித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை எதிரே மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, அப்பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இருப்பினும், உரிய நீதி கிடைக்காமல் உடலை வாங்கப் போவதில்லை என உறவினர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்த பெண்ணின் கணவர் அஜித் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தூத்துக்குடி டூ புதுக்கோட்டை.. ஏடிஎம் மையம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது!