திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டை பகுதியில் ஜோலார்பேட்டை கூட்டுறவு நகர வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு ஜோலார்பேட்டை பாபு நகர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மனைவி சரண்யா (54) ஜோலார்பேட்டை கூட்டுறவு நகர வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையில் உள்ள 74வது பாதுகாக்கப்பு பெட்டகத்தில் ஏழு சவரன் தங்க நகையை ஒரு பாக்ஸிலும், 23.1/2 சவரன் தங்க நகையை ஒரு பாக்ஸில் என இரண்டு பாக்ஸில் மொத்தமாக 30.1/2 சவரன் தங்க நகையை வைத்துவிட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் நேற்று சரண்யா ஜோலார்பேட்டை கூட்டுறவு நகர வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்ட தன்னுடைய நகையை எடுத்து செல்ல வந்துள்ளார்.
வங்கி மேலாளர் அலட்சியம்
அப்போது அவருடைய பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்ட இரண்டு பெட்டிகளில் ஏழு சவரன் தங்க நகை இருந்த பெட்டி மட்டும் இருந்துள்ளது. 23.1/2 சவரன் தங்க நகை வைக்கப்பட்ட பெட்டி காணாமல் போய் உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சரண்யா, உடனடியாக வங்கி மேலாளர் திருஞானசம்பந்திடம் இது குறித்து கேட்டுள்ளார். அதற்கு வங்கி மேலாளர் அலட்சியமாக எனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார். இதனால் வங்கி மேலாளருக்கும், சரண்யாவுக்கும் இடையே மிகுந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.