தேனி: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருக்கு ஈரோடு பகுதியைச் சேர்ந்த குமரவேல் என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகமாகியுள்ளார்.
அப்போது, தேனி மாவட்டம் உப்புகோட்டையை சேர்ந்த ரவி என்பவர் தனக்கு தெரிந்தவர் என்றும் அவர் மிகப்பெரிய தொழிலதிபர் என்றும் அவரின் பொருள் ஒன்றை கனடா நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை செய்துள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.96 ஆயிரம் கோடி என்றும் அந்தப் பணத்தை இந்தியா ரூபாயாக மாற்ற வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள பல துறைகளுக்கு பணம் செலுத்தினால்தான் இந்திய ரூபாயில் பணத்தை மாற்ற முடியும் என ஜெகதீஷிடம் கூறியுள்ளார். இதனையடுத்து குமரவேல் ரவியிடம் அறிமுகப்படுத்தி வைப்பதாக ஜெகதீஷை அழைத்துச் சென்றுள்ளார்.
அதன்படி, தேனி பழைய பேருந்து நிலையத்தில் ரவியின் அலுவலகத்தில் அவரை சந்திக்க குமரவேல், ஜெகதீஷை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ரவியின் உறவினர் திருலோகச்சந்தர் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் உடன் இருந்ததாகவும், தனது மாமா மிகப் பெரிய தொழில் அதிபர் என்றும் ரூ.10 லட்சம் கொடுத்தால் ரூ.100 கோடியாக திரும்பி தருவதாக திருலோகச்சந்தர் கூறியதாக தெரிவிக்கின்றனர்.
ரிசர்வ் வங்கி சின்னம்
மேலும், ரூ.96 ஆயிரம் கோடி பணத்திற்கான ஆதாரத்தையும், அதில் இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையெழுத்துடன் ரிசர்வ் வங்கி அடையாள சின்னம் பொறிக்கப்பட்டிருந்த ஆவணத்தை காட்டியதாகவும், இதனை நம்பி ரவியிடம் ரூ.30 லட்சம் கொடுத்ததாகவும், ஒரு மாதத்தில் உங்கள் வங்கி கணக்கில் ரூ.100 கோடி ரூபாய் செலுத்துவதாக தெரிவித்தனர்.