தமமுக தென்காசி வேட்பாளர் ஜான் பாண்டியன் தென்காசி: 2024 நாடளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை, இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வேட்பாளர் அறிமுக கூட்டம், பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தமட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், பாஜக கூட்டணி கட்சி சார்பில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தென்காசி ரயில் நிலையத்திற்கு வருகை தந்த அவருக்கு, கூட்டணி கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன், "தாமரை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. மக்கள் அனைவருமே தாமரை தான். தாமரை இல்லாமல் நாடே இல்லை. ஆகையால் தான், தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியைப் பொறுத்தவரை திமுகவிற்கும், பாஜகவிற்கும் தான் போட்டி. தென்காசி விவசாயம் சார்ந்த மாவட்டமாக உள்ளது. எனவே விவசாயம் சார்ந்த தொழிலுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். அந்த வகையில், எலுமிச்சைக்கு குளிர் பதனக் கிடங்குகள் மற்றும் அதிக அளவில் தொழிற்சாலைகள் உருவாக்கப்படும். பிரதமர் மோடி எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக வழங்கி வருகிறார். ஆகவே, மக்களை சந்தித்து மோடியின் திட்டங்களைக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவேன்.
தென்காசி என்னுடைய சொந்த தொகுதி. அதனால்தான், இங்கு போட்டியிடுகிறேன். நான் சிறுவயது முதல் ஓடி, ஆடி விளையாடிய இடம் இது. எனது சொந்தங்கள், நண்பர்கள் என அனைவரும் நிறைந்த பகுதி என்பதால் தான், இங்கு போட்டியிடுகிறேன். திமுகவைச் சேர்ந்த தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர், இதுவரை தொகுதிக்கும், மக்களுக்கும் ஒன்றும் செய்யவில்லை. இதற்கு முன்பு போட்டியிட்டவர்களும், தற்போது துவண்டு போய் உள்ளனர்.
ஆகவே, என்னை நம்பி தாமரைக்கு வாக்களிக்கும் மக்களுக்கு நான் நிச்சயம் பணி செய்வேன். எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் எம்.பி ஆனால், நாடாளுமன்றத்தில் மக்களுக்காக குரல் எழுப்பி, பிரதமர் மோடியிடம் பேசி, மக்களுக்கு வேண்டியதை செய்து தருவேன்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:'சமூக நீதி பேசும் திமுகவில் ஒரு சிறுபான்மையின வேட்பாளரையாவது காட்டுங்கள்' - நெல்லை முபாரக் - Lok Sabha Election 2024