தமிழ்நாடு

tamil nadu

நெல்லையில் மீண்டும் பள்ளி மாணவர்கள் மத்தியில் சாதிய மோதல்.. கழிவறையில் இழிவாக வாசகம் எழுதியதில் கைகலப்பு! - Nellai School Students clash

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 9:17 PM IST

School students communal clash: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசுப் பள்ளியில் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில இருவர் காயம் அடைந்த நிலையில், 22 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், வள்ளியூரில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

காலை தேநீர் இடைவேளையின் போது, இரு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ஒரு சமூகத்தைச் சார்ந்த இரு மாணவர்கள் காயம் அடைந்ததை அடுத்து, வள்ளியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாணவர்களின் மோதலை விலக்கி விட்ட ஆசிரியர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோதலில் ஈடுபட்டதாக 15 மாணவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், 10 நாட்களுக்கு முன்பு இரு சமூக மாணவர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்தது தெரியவந்தது.

அதனை அடுத்து, ஒரு சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் மற்றொரு சமூகத்தைச் சார்ந்தவர்களை இழிவுபடுத்தும் வகையில் பள்ளியின் கழிப்பறை சுவரில் வாசகங்கள் எழுதியதாகவும், பின்னர் இன்று யார் எழுதியது என கேள்வி எழுப்பியதை அடுத்து அது மோதலில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் சாதிய மோதல் தொடர்வதால், ஏழு பள்ளிகளில் ஆசிரியர்களை மாற்றம் செய்ய முடிவு செய்து, அவர்களுக்கான பணியிட மாற்ற உத்தரவு தயாரானது. இதனை எதிர்த்து அவர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மூலம் மாற்றத்தை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடைய, மோதல் நடைபெற்ற அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தளபதி சமுத்திரம் என்ற ஊரில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டதாகவும், அங்குள்ள தலைமை ஆசிரியர் வள்ளியூர் அரசுப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மாறுதலாகி செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், மாணவர்கள் இடையேயான மோதலை ஆசிரியர்கள் கட்டுப்படுத்த தவறுவதாகவும், மாலையில் பள்ளி முடிந்த சில நிமிடங்களில் அனைத்து ஆசிரியர்களும் சென்று விடுவதாகவும், மாணவர்கள் முழுமையாகச் செல்லும் வரை ஆசிரியர்கள் யாரும் இருப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முன்னதாக, கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதே பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் கழிவறை வசதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதும், ஆறு மாதங்களுக்கு முன்பாக இதே போன்ற பிரச்னையில் 10 மாணவர்களை போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மோதலில் 22 மாணவர்கள் மீது இளஞ்சிறார் சட்டப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளஞ்சிறார் சீர்திருத்த குழுமத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்ன குமார், வள்ளியூர் டிஎஸ்பி யோகேஸ்வரன் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்துசாமி ஆகியோர் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:“சும்மாலாம் சொன்னா வேலை நடக்காது..” தொழிலாளி எடுத்த விபரீத முடிவு.. தூத்துக்குடி யூடியூபர் கைதின் பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details