சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். பின்னர், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதையடுத்து, மூத்த நீதிபதியான டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரும் கடந்த 2023ஆம் ஆண்டு மே 24ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, மூத்த நீதிபதியாக இருந்த எஸ்.வைத்தியநாதன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த கங்காபூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.
பின்னர், உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான கங்கபூர்வாலா 2024ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த மகாதேவனை மே 24ஆம் தேதி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவனை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கல்பாத்தி ராஜேந்திர ஸ்ரீராம் அடுத்த வாரத்தில் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:புதுக்கோட்டையில் திருச்சி ரவுடி என்கவுண்டர்! - Pudukkottai Encounter