தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரி கழிப்பறையில் குழந்தையை பெற்றெடுத்த மாணவி.. கும்பகோணத்தில் அதிர்ச்சி சம்பவம்! - KUMBAKONAM STUDENT DELIVERED BABY

கும்பகோணத்தில் கல்லூரி கழிப்பறையில் மாணவி குழந்தையை பெற்றெடுத்து குப்பை தொட்டியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அரசு மருத்துவமனை, சிசு (கோப்புப்படம்)
கும்பகோணம் அரசு மருத்துவமனை, சிசு (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2025, 5:28 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மாணவி ஒருவர் கல்லூரி கழிப்பறையில் பெண் குழந்தையை பெற்றெடுத்து குப்பை தொட்டியில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு கல்லூரி பணியாளர்கள் வளாகத்தை சல்லடை போட்டு தேடியதில் கழிப்பறை அருகேயுள்ள குப்பை தொட்டியில் இருந்து குழந்தை மீட்கப்பட்டுள்ளது. தற்போது கல்லூரி மாணவியும், அவரது குழந்தையும் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கும்பகோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் 10க்கும் மேற்பட்ட துறைகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை (ஜன.30) கல்லூரி முடியும் நேரத்தில் மாணவி ஒருவர் அதிக ரத்த போக்கினால் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து மாணவியை மீட்ட கல்லூரி ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவமனையில் மாணவியை மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவருக்கு குழந்தை பிறந்திருப்பதென்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர், பிறந்த குழந்தை எங்கே? என்று போலீசார் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்க, அவர்கள் அதிர்ந்து போய், சக ஊழியர்களை கொண்டு கல்லூரி வளாகம் முழுவதும் வலைவீசி சிசுவைத் தேடியுள்ளனர்.

அப்போது பெண் குழந்தை ஒன்று குப்பை தொட்டியில் கிடந்ததை கண்டெடுத்து, அதனையும் உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது மாணவிக்கும், குழந்தைக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கல்லூரி மாணவியும், அவரது குழந்தையும் நலமுடன் உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:பல்லாவரத்தில் பெண் மருத்துவர் சடலமாக மீட்பு... சந்தேகத்தை கிளப்பும் செல்போன் உரையாடல்!

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார், கல்லூரி மாணவியுடன் பழகி கர்ப்பமாக்கியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சம்மந்தப்பட்ட மாணவி கும்பகோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வருவதும், அவரது தாயார் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், தந்தை வெளியூரில் வேலை செய்வதாகவும், எப்போதாவது ஒருமுறை மட்டும் தான் வீட்டுக்கு வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த உறவினருடன் காதல் ஏற்பட்டு, பழக்கத்தில் மாணவி கர்ப்பமானதாக தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் சரகத்தில் உள்ள ஆடுதுறை மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மேற்கட்ட தகவல் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, கல்லூரி மாணவியின் காதலனிடம் போலீசார் தொடர்பு கொண்டு பேசிய போது, மாணவியின் கர்ப்பத்திற்கு தான் தான் காரணம் என ஏற்றக் கொண்டதுடன், மாணவியை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாகவும், வெளியூரில் பணி செய்வதால் ஓரிரு நாளில் நேரில் வருவதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, கல்லூரி மாணவியும் மேஜர் என்பதாலும், இதுகுறித்து தனது காதலன் மீது புகார் எதுவும் அளிக்க விரும்பவில்லை என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவத்தில் இதுவரை எந்த பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த இளைஞர் வந்த பின்னர் இருவரிடமும் எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு, விரைவில் இரு வீட்டாருடன் கலந்து பேசி திருமணம் செய்து அறிவுறுத்தப்படலாம் அல்லது மகளிர் காவல் நிலையத்திலேயே திருமணம் நடத்தி வைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

ABOUT THE AUTHOR

...view details