கோயம்புத்தூர்:கோவை ஆலாந்துறை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில், மூலவரான வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு வடிவத்தில் ஏழாவது மழையில் அமைந்துள்ளார்.
சுயம்பு வடிவிலான சிவனை தரிசிக்க ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை மலையேற்றம் செய்ய பக்தர்களுக்கு, வனத்துறையினர் அனுமதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், கடந்த 8ம் தேதி சிவராத்திரி கொண்டாடப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கு வருகை புரிந்து வருகின்றனர்.இந்நிலையில் மலைக்கு நண்பர்களுடன் சென்ற இளைஞர் உடல் நிலை மோசமான காரணத்தால் உயிரிழந்துள்ளார்.
வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த ரஜேஷ் என்பவரின் மகன் கிரண் (22), தனது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெள்ளியங்கிரி மலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.அப்போது 5-ஆவது மலை ஓட்டன் சமாதி அருகே சென்றபோது திடீரென கிரணுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் உடனடியாக பூண்டி அடிவார பகுதியில் இருந்த சுமை தூக்கும் தொழிலாளர்களை வைத்து அடிவாரம் பகுதிக்கு கிரணை அழைத்து வந்துள்ளனர்.
பின்னர், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் கிரணுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் மலையற்றம் செய்ய வேண்டாம் என நாள்தோறும் அறிவித்து வருகிறோம்.