தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் குழந்தைகள் கடத்தல் கும்பல் குறித்துப் பரவும் தகவல் முற்றிலும் வதந்தி - கோவை எஸ்.பி பத்ரி நாராயணன் - Coimbatore child trafficking gang

Coimbatore SP Badri Narayanan: வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளைக் கடத்துவதற்காகக் கோவையில் நுழைந்துள்ளதாக வாட்ஸப் மூலம் வெளியாகும் தகவல் முற்றிலும் வதந்தி எனக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் குழந்தைகள் கடத்தல் கும்பல் குறித்துப் பரவும் தகவல் முற்றிலும் வதந்தி
கோவையில் குழந்தைகள் கடத்தல் கும்பல் குறித்துப் பரவும் தகவல் முற்றிலும் வதந்தி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 7:56 PM IST

கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளைக் கடத்துவதற்காக நுழைந்துள்ளதாக வாட்ஸ்அப் மூலம் தகவல் வந்துள்ளது. இது முழுவதும் வதந்தி, இந்த வதந்தி குரல் பதிவுகளாகப் பரவி வருகிறது.

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் இதனை 100% வதந்தி எனக் கூற முடியும். குழந்தை கடத்தல் கும்பல் குறித்த தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். வட மாநிலத்திலிருந்து கோவையில் நிறையப் பேர் தொழில் நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். இந்த சூழலில் இது வட மாநிலத்தவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும் விதத்தில் பரப்பப்படுகிறது. இது தொடர்பாக எந்த விதமான தகவலும் காவல்துறைக்கு வரவில்லை.

இந்த தகவலை யார் பதிவிட்டார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதை யார் பரப்பினார்களோ அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கோவை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் தொடர்பாக எந்த வழக்கும் பதிவாகவில்லை. பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது வாட்ஸ்அப் எண்ணுக்கோ அழைத்தால் அனைத்து சந்தேகங்களும் தீர்க்கப்படும்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் குழந்தை கடத்தல் ஈடுபட்டவர்கள் பிடிபட்டதாகவும், அதே போன்று மேட்டுப்பாளையத்தில் 18 பேர் வந்திருக்கிறார்கள் என்றும் குரல் பதிவுகள் வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருவது முற்றிலும் தவறானது. பொதுமக்கள் யாரும் இதனை நம்ப வேண்டாம். மேலும், நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பதட்டமான பகுதிகளை ஆய்வு செய்யும் பணி துவங்கி உள்ளது.

அந்த பணி முடிந்த பிறகு முழுமையாக அதுகுறித்து தெரிவிக்கப்படும். கோவை மாவட்டத்தைப் பொருத்தவரை தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கூல் லிப் போன்றவை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரைப் போதைப் பொருட்கள் புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கோவையில் மூதாட்டியை தள்ளிவிட்டு அரிசி, புண்ணாக்கு சாப்பிட்ட யானை - வைரலாகும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details