கோயம்புத்தூர்:கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தவர் ப.ரங்கராஜ். இவர் ஊராட்சி மன்ற விதிகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக அந்த ஊராட்சியின் முன்னாள் துணைத் தலைவராக இருந்த ஆனந்தகுமார் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும் சோமையம்பாளையம் ஊராட்சியில் மலைதள மேம்பாட்டுக் குழுமத்தின் அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறி தொழிற்சாலைகளுக்கும் குடியிருப்பு கட்டிடங்களுக்கும் கட்டிட வரைபட அனுமதி வழங்கியதாகவும், சுகாதாரப் பணிகள் மற்றும் குப்பைகளை அகற்றும் வகையில் விதிமுறைகளை மீறி செலவினம் மேற்கொண்டதாகவும் கரோனாவின் போது சுகாதாரப் பொருட்கள் மற்றும் ப்ளீச்சிங் பவுடர் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு வாங்கியதாகவும், குடிநீர் குழாய் பராமரிப்பு உபகரணங்கள் கொள்முதல், தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் கொள்முதல், மின்மோட்டார் மற்றும் உதிரி பாகங்கள் கொள்முதல் , தார் சாலை அமைத்தல் என பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது எழுந்தன.