கோயம்புத்தூர்: கோவை சித்தாபுதூர் பகுதியில் 1970களில் தூய்மைப் பணியாளர்கள் அதிகமானோர் வசித்து வந்த நிலையில், பெரும்பான்மையானோர் வீடுகளின்றி குடிசை மற்றும் சாலையோரங்களில் வாழ்ந்து வந்துள்ளனர். அந்த நிலையில், அப்போதைய கருணாநிதி ஆட்சிக் காலத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டு, பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த குடியிருப்புகள் பழுதடைந்த காரணத்தினால், கடந்த அதிமுக ஆட்சியில் 2018ஆம் ஆண்டு குடியிருப்புகளை இடித்துவிட்டு, அதே இடத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் காரணமாக, அங்கிருந்த பொதுமக்கள் அனைவரையும் வெளியேறும்படி அதிகாரிகள் கூறியதால், அனைவரும் அங்கிருந்து வெளியேறி கோவையில் பல்வேறு இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
15 மாதங்களுக்குள் லிப்ட், குடிநீர் இணைப்பு, புதிய மின் இணைப்பு, பூங்கா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு வழங்கப்படும் எனவும், அதற்கு பயனாளிகள் பணம் ஏதும் தர வேண்டியதில்லை என அப்போதைய தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, அனைத்து மக்களும் வீடுகளை காலி செய்து சென்ற நிலையில், கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைத்தார், அதில் ஒரு நிகழ்வாக இந்த குடியிருப்புகளையும் திறந்து வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அனைத்து பயனாளிகளும் இந்த 7 மாடி குடியிருப்புக்கு குடியேறினர்.
அதன் பின்னர், இந்த குடியிருப்பில் அடிப்படை வசதிகள் எதுவும் முழுமையாக செய்யப்படவில்லை எனவும், பணிகள் முழுமையாக முடிவதற்குள்ளாகவே இதனை ஒப்படைத்து விட்டனர் என பயனாளிகளுக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்து பயனாளிகள் கூறுகையில், “இந்த குடியிருப்பில் மொத்தமாக 224 வீடுகள் உள்ளன. இதில் எந்த ஒரு வீட்டிலும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு எதுவும் செய்து தரப்படவில்லை.
அதாவது ஸ்விட்ச் பாக்ஸ் இருந்தும் மின் இணைப்பு இல்லை, குழாய் இருந்தும் தண்ணீர் வராது. மேலும், குழந்தைகளுக்காக பூங்கா அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், பூங்கா இங்கு அமைக்கப்படவே இல்லை. பூங்கா அமைக்கப்படும் என்று கூறிய இடம், கற்களும் மண்ணும் கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சியளிக்கிறது.
அது மட்டுமின்றி, 400 சதுர அடியில் ஒவ்வொரு வீடுகளும் அமைக்கப்படும் எனக் கூறியிருந்த நிலையில், வீட்டிலுள்ள சமையலறையும், கழிவறையும் அருகருகில் அமைக்கப்பட்டு, உள்ளே நுழைவதற்கு கூட போதிய வசதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. வீடுகளில் டைல்ஸ் போட்டு தரப்படும் என்று கூறியிருந்த நிலையில், வெறும் சிமெண்ட் தரை மட்டுமே போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அங்கு பூசப்பட்ட வண்ணப் பூச்சுகளும் கை வைத்தால் ஒட்டிக்கொண்டு வருகின்றன.