தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

79.73 டன் பிளாஸ்டிக்கை சேகரித்து கோவை பிஎஸ்ஜி கல்லூரி கின்னஸ் சாதனை! - Coimbatore PSG

PSG College Guinness Record: பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரித்த பி.எஸ்.ஜி கல்லூரி போன்று கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்த ஆண்டு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

கோவை பிஎஸ்ஜி கல்லூரி கின்னஸ் சாதனை
கோவை பிஎஸ்ஜி கல்லூரி கின்னஸ் சாதனை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 3:50 PM IST

கோவை பிஎஸ்ஜி கல்லூரி கின்னஸ் சாதனை

கோயம்புத்தூர்:பிளாஸ்டிக் பொருட்களால் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதற்காக 79.73 டன் பிளாஸ்டிக்கை சேகரித்து, கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

மாணவர்களுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து மறுசுழற்சி செய்யும் பணியை இக்கல்லூரி துவங்கி, பல மாதங்கள் தொடர்ச்சியாக பணியாற்றி, மாணவர்களின் துணையுடன் மொத்தம் 79.73 டன் பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்துள்ளதை கின்னஸ் புத்தகம் அங்கீகரித்துள்ளது. கின்னஸ் சாதனை புரிந்தற்காக, நேற்று (ஜன.31) மாலை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி நிர்வாகத்திற்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்றார். அப்போது, கல்லூரி நிர்வாகத்துக்கு கின்னஸ் சாதனை புரிந்ததற்கான சான்றிதழ், கின்னஸ் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது. பின்னர், அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக 16 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்துள்ளோம்.

பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரித்த பி.எஸ்.ஜி கல்லூரி போன்று, கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம். தற்போது அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க ஒரு சில மக்கள் உலோகத்தாலானப் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.

மக்களின் மன மாற்றத்தின் அடிப்படையில்தான், சமூகத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும். பிளாஸ்டிக் போன்ற பாட்டில்களைத் தவிர்த்து, உலோகங்கலாளான பாட்டில்களைப் பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது, பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாட்டைத் தவிர்க்க முடியும்.

பசுமை தமிழகத் திட்டம் என்ற பெயரில், 27 சதவீதம் உள்ள வனத்தின் அளவை 33 சதவீதமாக உயர்த்த ஆண்டுக்கு 10 கோடி நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளர். அதே போன்று, நீர்நிலைகளை பாதுகாக்கவும் திட்டங்கள் வகுத்துள்ளார். மேலும், காலநிலை மாற்றங்களால் ஏற்படும் மாற்றங்களை சமாளிக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளது. காலநிலை மாற்றத்தினால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க, சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த இருக்கிறோம்.

உலக வங்கிகள் உதவி மூலம் ஆயிரத்து 600 கோடியில் கடலோரப் பகுதியில் உள்ள பாதிப்புகளைத் தவிர்க்க, பசுமைப் பணிகள் ஏற்படுத்தும் திட்டத்தை தொடங்க இருக்கிறோம். மேலும், வெளிநாட்டு மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மலைப் பிரதேசங்களில் வெளிநாட்டு மரங்களால் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. ஆகையால், சிறப்புத் திட்டங்கள் கொண்டு வந்து வெளிநாட்டு மரங்களை அகற்ற இருக்கிறோம்.

தைல மரங்களுக்குப் பதிலாக சவுக்கு மரங்கள் நடவு செய்யப்பட்டு வருகிறது. முழுமையாக வெளிநாட்டு மரங்களை தடை செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக வேப்பமரம், அரசமரம், ஆலமரம், மூங்கில் மரம், பூவரசன் போன்ற நாட்டு மரங்களை நடவு செய்தால், பல்வேறு பறவைகளையும் பாதுகாக்கலாம். நல்ல ஆக்சிஜன் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"விரைவில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படும்" -ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி!

ABOUT THE AUTHOR

...view details