கோயம்புத்தூர் : ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையில் மதுபோதையில் கட்டிட தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஏர்கன் துப்பாக்கியால் சுட்டதில் தொழிலாளி செந்தில்குமார் (45) என்பவரது வலது தொடையில் குண்டு பாய்ந்தது.
பின்னர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களால் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில், ஏர்கன் குண்டு ரத்த நாளத்தை துளைத்து எலும்புக்கு அருகில், தொடையில் ஆழமாக தங்கியிருப்பது ஸ்கேன் மூலம் கண்டறியப்பட்டது.
பின்னர் நோயாளியின் நிலையை அறிந்த மருத்துவக்குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதில், துப்பாக்கியால் சேதமடைந்த ரத்த நாளம் சரிசெய்யப்பட்டு, எலும்புக்கு அருகில் தொடையில் ஆழமாக தங்கியிருந்த துப்பாக்கிகுண்டை அகற்றினர். இதனால் நோயாளியின் உயிர் மற்றும் கால் வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டது. தற்போது செந்தில்குமார் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.