கோயம்புத்தூர்:கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெண் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க கோரி நாடு முழுவதும் மருத்துவர்கள் அடையாள போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 14ம் தேதி இரவு பெண் மருத்துவர் ஒருவர் பணியிலிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நடக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அந்த நபரைக் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
கோவை அரசு மருத்துவமனை:இந்த சூழலில் கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதை அடுத்து, அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பெண் மருத்துவர்கள் தங்கியுள்ள விடுதி, அவர்கள் பணிபுரியும் வார்டு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாவலர்கள் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் நிர்மலா, ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,"கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு தங்கும் அறை மற்றும் கழிவறை வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அது நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் பழுதடைந்துள்ளதால், அதனை சீரமைக்க பொதுப்பணித்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எனவே அந்த குறை இல்லை மின்விளக்குகள் சரியாக எரிவது இல்லை என புகார் வந்தது அதனை சீரமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது என்றார். மேலும் கோவை அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் 250 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.