தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டும்".. நான்கு மாத தேடுதல் வேட்டை.. ஆல்வின் பிடிபட்டது எப்படி? - Rowdy Alwin shot - ROWDY ALWIN SHOT

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

ரவுடி ஆல்வின் மற்றும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்
ரவுடி ஆல்வின் மற்றும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2024, 2:21 PM IST

கோயம்புத்தூர்:கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில், காவலர் குடும்பத்தினர்களுக்கான யோகா பயிற்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இன்று காலை கொடிசியா மைதானத்தில் ரவுடி சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக பேசினார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “காலையில் சுட்டு பிடிக்கப்பட்ட ஆல்வின் கன்னியாகுமரியில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஆவார். அவர் மீது 3 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

ஆல்வின் மீது என்பிடபிள்யூ (Non-bailable warrant) வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, தலைமறைவான ஆல்வினை பிடிக்க நான்கு மாதங்களாக பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேறு மாநிலத்தில் தங்கி இருந்த அவரை, தனிப்படை போலீசார் பிடிக்கச் சென்ற போது தப்பிச் சென்று விட்டார்.

இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொடிசியா பகுதியில் பதுங்கி இருந்த ஆல்வினை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது ரவுடி ஆல்வின், ராஜ்குமார் என்ற காவலரை கத்தியால் தாக்கினார், இதனால் தற்காப்பிற்காக போலீசார் அவரை சுட்டுப் பிடித்தனர் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் யார், யார் தொடர்ச்சியாகக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதைக் கண்காணித்து வருகிறோம். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வழக்குகளில் முறையாக நீதிமன்றங்களில் ஆஜராகாதவர்கள் குறித்தும் கண்காணித்து வருகிறோம். நீதிமன்றங்களில் ஆஜராக வருபவர்கள் மீது பழிக்குப் பழி தாக்குதல் நடக்காத வண்ணம் இருக்க, அதற்கான கண்காணிப்புகளும் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

மேலும், கடந்த ஆண்டு சத்திய பாண்டி கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்க எதிர் தரப்பினர் திட்டம் தீட்டி வருவது குறித்தும் கண்காணித்து வந்த நிலையில், சில குற்றச் சம்பவங்களைத் தடுத்துள்ளோம். குறிப்பாக, தலைமறைவாக இருந்த ஆல்வின் வேறு சில திட்டங்கள் தீட்டி வந்ததும் தெரிய வந்தது. இந்த நபர் சம்பந்தப்பட்ட வழக்கில் பாதி பேர் சிறையில் உள்ள நிலையில், மற்றவர்கள் முறையாக நீதிமன்றங்களில் ஆஜராகி வருகின்றனர்.

காவலர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்வது எங்களுடைய பணியில் ஒரு பகுதி, அதை பயன்படுத்துவதற்கும் சட்டத்தில் இடமுள்ளது. துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் யாரும் எடுத்துச் செல்வதில்லை, ஆனால் காவலரின் உயிருக்கு ஆபத்து வரும்போது அதைப் பயன்படுத்தும் கட்டாயம் ஏற்படுகிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோவையில் பிரபல ரவுடி மீது துப்பாக்கிச்சூடு.. யார் இந்த ஆல்வின்?

ABOUT THE AUTHOR

...view details