கோயம்புத்தூர்:கோவை மாவட்ட நிர்வாகமும், கொடிசியா அமைப்பும் இணைந்து நடத்தும் 8வது புத்தகத் திருவிழா 2024 கொடிசியா வளாகத்தில் கடந்த 19ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கோவை புத்தகத் திருவிழா நேற்று இரவு 8 மணியுடன் நிறைவு பெற்றது.
இந்த புத்தகத் திருவிழாவில், கிட்டத்தட்ட 285 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பதிப்பாளர்கள், அவர்களது புத்தகங்களை காட்சிப்படுத்தி இருந்தனர். அதுமட்டுமின்றி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக களைகட்டி வந்த புத்தகத் திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
இதில், சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காட்சிக்கு வருகை புரிந்துள்ளதாக கொடிசியா அமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு 67 ஆயிரத்து 500 பேர் புத்தகத் திருவிழாவிற்கு வருகை புரிந்த நிலையில், இந்த ஆண்டு 7 ஆயிரத்து 500 பேர் கூடுதலாக வருகை புரிந்துள்ளனர்.