சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் உரையற்றிய தமிழக முதலைமைச்சர் மு.க ஸ்டாலின் கூறுகையில், “கடந்த மூன்று ஆண்டுகளாக வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுத்து வருகிறோம். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பருவ காலங்களில் தமிழ்நாட்டிற்கு மழை கிடைக்கிறது.
சமீப காலமாக காலநிலை மாற்றத்தால், இந்த மழை சில நாட்களிலேயே மொத்தமாகப் பெய்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதளவு பாதிக்கப்படுகிறார்கள். இதில் பொதுமக்களின் அவசியத் தேவையான குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்படுகிறது.
கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழைக் காலத்தில், சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த ஆண்டும் பேரிடர்களின் தாக்கத்தினை திறம்பட எதிர்கொள்ள தேவையான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த வகையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் 14.9.2024 மற்றும் 21.9.2024 ஆகிய நாட்களில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி ஆணையர்களுடன் வடகிழக்கு பருவமழை குறித்த ஆயத்தப் பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தி அலுவலர்களுக்கு அவர் அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.
இதையும் படிங்க:“இனி எந்நாளும் தமிழ்நாட்டை திமுக தான் ஆள வேண்டும்”- முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை!
சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வானிலை முன்னெச்சரிக்கையினால் நாம் பெரிய அளவிலான சேதங்களை தவிர்க்க முடியும். வானிலைத் தரவுகளை உடனுக்குடன் வழங்க கடந்த 22.08.2024 அன்று தரம் உயர்த்தப்பட்ட மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தினை நான் திறந்து வைத்தேன்.
இந்த அவசரகால வானிலை மையத்தில் பல்துறை வல்லுநர்கள் கொண்ட தொழில்நுட்பக் குழு இயங்கி வருகிறது. பல துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில், ஒருங்கிணைப்பு மையத்துடன் தற்போது செயல்பட்டு வருகிறது.
மேலும் தற்போது 1400 தானியங்கி மழைமானிகளையும், 100 தானியங்கி வானிலை மையங்களையும் நிறுவி நிகழ்நேர தகவல்களை பெற்று வருகிறோம். இந்த செயலி மூலம் மக்களுக்கு உடனடி முன்னெச்சிரிக்கை தகவல் சென்றடையும்.