திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதி (வயது 23). இவர் ஏலகிரி மலையில் கல்வி கற்று பின்னர் பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பை முடித்துள்ளார். படித்துக் கொண்டிருக்கும் போது இவருக்குத் திருமணமான நிலையில், படிப்பை விடாமல் தொடர்ந்து படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வுக்குத் தயாராகி வந்த ஸ்ரீபதிக்கு பிரசவ தேதியும், தேர்வு தேதியும் ஒரே நாளில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். நல்வாய்ப்பாகத் தேர்வுக்கு முந்தைய நாளே ஸ்ரீபதிக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்தாலும், தேர்வு எழுதுவதில் உறுதியாக இருந்த ஸ்ரீபதி, தனது கணவர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன் பிரசவம் ஆன 2வது நாளில் காரில் சென்னைக்குப் பயணம் செய்து, சிவில் நீதிபதி தேர்வு எழுதியுள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியான டி.என்.பி.எஸ்.சி சிவில் நீதிபதி தேர்வு முடிவில் ஸ்ரீபதி சிவில் நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார். 23 வயதில் சிவில் நீதிபதியாகத் தேர்வாகியுள்ள பழங்குடியின பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் ஸ்ரீபதிக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.