சென்னை:நீட் தேர்வு சர்ச்சைகளை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “நீட் தேர்வு தொடர்பாக நடைபெற்று வரும் சர்ச்சைகள், சமத்துவத்துக்கு எதிரான அதன் தன்மையை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்டு வந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்துக்காக மேலும் பல வாய்ப்புகளை நாம் வழங்க வேண்டும். மாறாக, அத்தகைய மாணவர்களுக்கான வாய்ப்புகளுக்கு 'நீட்' தடை போடுகிறது.
தேசிய தேர்வு முகமை மேல் தவறில்லை என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் பேசியிருந்தாலும், நடந்துவரும் நிகழ்வுகள் அதற்கு மாறான சித்திரத்தையே அளிக்கின்றன. தேர்வுக் கண்காணிப்பாளர்கள் பணம் பெற்றுக்கொண்டு OMR விடைத்தாள்களில் திருத்தம் மேற்கொண்டது, அதற்கு ஆதாரமாகப் பல கோடி ரூபாய்க்கான காசோலைகள், தொகை குறிப்பிடப்படாத காசோலைகள் கைப்பற்றப்பட்டது உள்ளிட்ட புகார்கள் மீது குஜராத் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்துள்ளனர்.