சென்னை:திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள பிரபல தனியார் எலும்புமுறிவு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்ததாகவும், 26 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தீ விபத்தில் உயிரிழந்த நபர்கள் மற்றும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ஆறுதலையும், நிவாரண நிதியையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள பிரபல தனியார் எலும்புமுறிவு மருத்துவமனையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்து, மருத்துவமனையில் சிக்கிய நோயாளிகளை மீட்டனர்.
ஆறு பேர் உயிரிழப்பு:
இந்த விபத்து நிகழ்ந்தபோது, மின்தூக்கியில் (Lift) சிக்கிக் கொண்டவர்களை தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:தூத்துக்குடி சிறுவன் வழக்கு; 'இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை' - காவல்துறை முக்கிய அப்டேட்..!
அதில், மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள், ஒரு சிறுமி என ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் இரங்கல்:
அந்த அறிக்கையில், "திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று (டிச. 12) இரவு 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் தாடிக்கொம்பு, பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த மணிமுருகன் (வயது 30), மாரியம்மாள் (வயது 50), தேனி மாவட்டம் சீலம்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சுருளி (வயது 50), சுப்புலட்சுமி (வயது 45), திண்டுக்கல் என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 36), கோபிகா (வயது 6) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
நிவாரண நிதி அறிவிப்பு:
மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.