தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

களிமண், வண்டல் மண் எடுக்க கட்டணமில்லை : அனுமதி ஆணை வழங்கினார் முதலமைச்சர்! - free soil for agricultural use

Free Soil: விவசாய பயன்பாட்டிற்கு ஏரி, குளங்களில் இருந்து கட்டணமின்றி களிமண், வண்டல் மண் எடுக்க அனுமதிபெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 6:25 PM IST

முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணை வழங்கும் புகைப்படம்
முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணை வழங்கும் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி, குளம், கண்மாய்களிலிருந்து விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதற்கான அனுமதி ஆணைகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்,“நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், கண்மாய்களில் உள்ள வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் விவசாய பயன்பாட்டிற்கும் மற்றும் மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என்றும், இதன்மூலம் இவர்கள் பயன்பெறுவதோடு ஏரி , குளம் மற்றும் கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டு அதிக மழை நீரைச் சேமித்திட இத்திட்டம் உதவும் என முதலமைச்சர் கடந்த ஜூன் 2024 அறிவித்தார்.

இத்திட்டத்தினை எளிமையாக செயல்படுத்திட, தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள், 1959-ல் அரசு ஆணை எண் 14, இயற்கை வளங்கள் துறை, ஜூன் 2024ல் திருத்தம் செய்யப்பட்டு இணையதளம் (tnesevai.tn.gov.in) மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிலாக வட்டாட்சியர்களால் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:மேலும், பயனாளிகள் தங்களது கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலைகள் உட்பட அவர்கள் சேர்ந்த வட்டத்தில் அமைந்துள்ள நீர்நிலைகளிலும் வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம். நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செயற்பொறியாளர்கள், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் துணை இயக்குநர், உதவி இயக்குநர், வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஏரி, குளம் மற்றும் கண்மாய் பொறுப்பாளர்களுக்கு இத்திட்டத்தினை செயல்படுத்திட வழிகாட்டும் நெறிமுறைகள் இயற்கை வளங்கள் துறையால் ஜூன் 2024ல் வெளியிடப்பட்டது.

இணையதளம்:இத்திட்டத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்களுக்கு அனுமதி ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார். அதன்படி, இன்று முதல் விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்ட தொழில் செய்வோர் thesevai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் சரவண வேல்ராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: இறுதிக்கட்ட பரப்புரையில் உதயநிதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details