தருமபுரி: தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை திடீரென நீர்வரத்து விநாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கனமழை: ஒகேனக்கல் சுற்று வட்டார பகுதி மற்றும் தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியிலிருந்து 10 ஆயிரம் கன அடியாக இன்று காலை அதிகரித்தது. பின்னர் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 17,000 கன அடியாக உயர்ந்தது.
இதையும் படிங்க: கிடுகிடுவென உயர்ந்த காய்கறிகள் விலை.. தருமபுரி உழவர் சந்தை நிலவரம் என்ன?
சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றம்: காலாண்டு தேர்வு விடுமுறை இன்றுடன் நிறைவடையும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதாலும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலில் குளிக்க மற்றும் பரிசல் சவாரி செல்ல ஆர்வமுடன் வந்தனர். இந்நிலையில், நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து ஒகேனக்கலில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்