சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும், இல்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் இணைந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
முதல்வர் அறிவுறுத்தல்:ஏற்கெனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் சாம்சங் தொழிலாளர்கள் விவகாரத்தில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் தலையிட்டு விரைவில் தீர்வு காணுமாறு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்பேரில், அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனத்திடம் வரும் திங்கள்கிழமை (அக்.7) பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:‘களஞ்சியம்’ செயலியால் தீபாவளி முன்பணம் பெற முடியவில்லையா? அரசு ஊழியர்கள் கடிதம்!
உற்பத்தி பாதிப்பு:சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சி.ஐ.டி.யூ சங்கத்தை தொடங்கினர். இந்த சங்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும், இன்டெர்னல் கமிட்டி அமைப்பதை கைவிட வேண்டும், போட்டி அமைப்பை உருவாக்குவதைக் கைவிட வேண்டும், ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சாம்சங் தொழிற்சாலையில் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த போராட்டம் தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அதில், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு, விரைவான மற்றும் இணக்கமான தீர்வை ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் இந்த விவகாரத்தில் தீர்வை ஏற்படுத்த, மத்திய அரசு முழு ஆதரவை வழங்கும் எனவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இப்பிரச்னையில் விரைந்து தீர்வு காண அமைச்சர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதனால் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு தீர்வு ஏற்பட்டு போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.