சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று, வினா விடை நேரத்தில், அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு தொடர்புள்ளதா? என்பதை விளக்க வேண்டும் என பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜி.கே.மணி மட்டுமல்ல, அவரது கட்சி தலைவர்களும், கட்சியினரும் தொடர்ந்து பொது வெளியில் இது குறித்து பேசி வருகின்றனர். தமிழ்நாட்டில் அதானியின் குழுமத்தின் தொழில் முதலீடுகள் குறித்து பொதுவெளியில் வரும் தவறான தகவல்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து விளக்கமளித்து வருகிறார். அதற்கு பிறகும் தொடர்ந்து இது தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
முதலமைச்சர் கேள்வி:
அதானி நிறுவனத்துடனான முதலீடுகளை வைத்து தமிழ்நாடு அரசுக்கு களங்கம் ஏற்படுத்த நினைப்பவர்களைப் பார்த்து நான் கேள்வி கேட்க விரும்புகிறேன். அதானி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என இண்டி கூட்டணி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
திமுக மீது குறை சொல்லும் பாஜக, பாமக கட்சியினர் நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை ஆதரிக்க தயாராக உள்ளதா? நாடாளுமன்றத்தில் இது குறித்து விளக்கி பேச தயாராக உள்ளீர்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதானியை சந்திக்கவில்லை:
தொடர்ந்து, “நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரிக்கையை பாமக ஆதரிக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டிற்கும், இதற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. என்னை வந்து அதானி சந்திக்கவும் இல்லை. நான் அவரை பார்க்கவும் இல்லை. இதைவிட விளக்கம் தேவையா?” என்றார்.
அதானி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பெயர் இருப்பது குறித்த முதலமைச்சரின் விளக்கம் ஏற்கும் வகையில் இல்லை எனக் கூறி பாமக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
முதலமைச்சர் விளக்கத்தில் திருப்தி இல்லை:
செய்தியாளர்கள் சந்திப்பில் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி (ETV Bharat TamilNadu) வெளிநடப்பிற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து ஜி.கே.மணி, “அதானி விவாகாரம் தொடர்பாக, சட்டப்பேரவையில் பாமக சார்பில் கேள்வி எழுப்பினோம். அமெரிக்காவில் அதானி மீதான வழக்கில் தமிழ்நாடு அரசின் பெயரும் இடம்பெற்றுள்ளது. சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இது உண்மையா? அல்லது உண்மைக்கு புறம்பான செய்தியா? என முதலமைச்சர் விளக்கமளிக்க வலியுறுத்தினோம்.
இதையும் படிங்க:"உ.வே.சாமிநாதர் பிறந்த நாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும்" - முதலமைச்சர் அறிவிப்பு!
அதானி விவகாரத்தில், அதானியை சந்திக்கவில்லை என்ற முதலமைச்சரின் பதில் திருப்தியளிக்கிறது. ஆனால், அமெரிக்க நீதிமன்ற வழக்கில் தமிழ்நாடு அரசு பெயர் இருப்பது குறித்த விளக்கத்தில் திருப்தி இல்லை. முறைகேடுகளுக்கு எதிராக பாமக எப்போதும் குரல் கொடுக்கும்,” என்றார்.
வட மாவட்டங்களுக்கு ஏன் இந்த பாகுபாடு?
“சாத்தனூர் அணை அறிவிப்பு இல்லாமல் திறக்கப்பட்டதால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணத்தில் அநீதி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னை, தூத்துக்குடி, நெல்லை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.6,000 என நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.
ஆனால், மழை வெள்ளத்தால் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.2 ஆயிரம் மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஏன் இந்த பாகுபாடு? வட மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.