சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக 3 கோடி ரூபாய் மதிப்பிலான 5 புதிய அதிநவீன சொகுசு பேருந்துகளின் சேவையினை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உள்ளூர் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், அன்னியச் செலாவணியினை ஈட்டுதல் ஆகியவற்றில் சுற்றுலாத் துறை முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத் தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பல்வகையான சுற்றுலா தலங்கள், பழம்பெரும் திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய பெரும் வாய்ப்புகள் அடங்கிய சுற்றுலாத்துறையை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு-ஒகேனக்கல், மைசூர்-பெங்களூர்.
குற்றாலம், நவக்கிரக கோயில்கள் தொகுப்பு மற்றும் மூணார் என மூன்று நாட்கள் செல்லும் சுற்றுலா பயண திட்டங்களும். சென்னை-மாமல்லபுரம், காஞ்சிபுரம்- மாமல்லபுரம், திருப்பதி, திருவண்ணாமலை, புதுச்சேரி என ஒரு நாள் சுற்றுலா பயண திட்டங்களும். எட்டு நாட்கள் பயணம் செய்யும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா கோவா-மந்த்ராலயம் சுற்றுலா பயண திட்டங்களும்.
14 நாட்கள் பயணம் செய்யும் தென்னிந்திய சுற்றுலா பயண திட்டங்களும், யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பழமையான பண்பாட்டு சின்னங்களை பார்வையிடும் சுற்றுலா பயண திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுலா பயண திட்டங்கள் பொதுமக்களின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.