ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற கோதண்டராமர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இலங்கை மன்னனாக 'விபீஷ்னர்' முடிசூடிய இடமாக உள்ள இந்தக் கோயிலுக்கு வருகை தந்து ஏராளமானோர் வழிபட்டுச் செல்கின்றனர்.
கை விடப்பட்ட வழிபாடுகள்: இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோதண்டராமர் கோயில், அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளில் வரக்கூடிய யாத்திரைகள் பூஜை செய்யவும், வழிபாடு நடத்தவும் 120 பேர் கொண்ட குழு ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. காலப்போக்கில் போதிய வருமானம் கிடைக்காததால், யாத்திரைகளுக்கு வழிபாடு செய்யவும், பூஜை நடத்தவும் வழி நடத்தி வந்த குழுக்கள் மெல்ல மெல்ல அதனை கைவிட்டு மாற்றுத் தொழிலுக்குச் சென்று விட்டனர்.
ராமர் கல் என்று சொல்லி கட்டணம்: இந்த நிலையில், கோயிலின் ஒரு தரப்பினர் கடந்த 5 ஆண்டுகளாக கோதண்ட ராமர் கோயில் கடற்கரை பகுதியில் சிவலிங்கத்தை வைத்து, அதன் அருகே தண்ணீரில் மிதக்கக்கூடிய 'கோரல்' என்று கூறப்படும் கல்லை வைத்து, இது ராமர் கல் என்று கூறி வரக்கூடிய பக்தர்களிடம் ஆசிர்வாதம் வழங்கி, ஒரு நபருக்கு 20 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்து வந்துள்ளனர். இதில், தங்களையும் சேர்த்துக் கொள்ளுமாறு ஏற்கனவே பணியாற்றிய பணியாளர்கள் கூற, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்னைகள் இருந்து வந்துள்ளது.