தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இந்த ரூட்ல எப்படி வருவ?' உருட்டு கட்டையுடன் பாய்ந்த மினி பஸ் டிரைவர்.. பயணிகள் அதிர்ச்சி! - mini bus drivers fight

mini bus drivers fight in karaikudi: காரைக்குடியில் மினி பேருந்து இயக்குபவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையில் உருட்டு கட்டைகளுடன் சண்டையிட முயன்ற சம்பவம் பயணிகளுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது.

உருட்டு கட்டையுடன் மினி பஸ் டிரைவர்
உருட்டு கட்டையுடன் மினி பஸ் டிரைவர் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 10:51 AM IST

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இயக்கப்பட்டு வரும் மினி பஸ்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்திலும், அனுமதிக்கப்பட்ட நேரத்திலும் இயக்காமல் இஷ்டம்போல் இயக்குவதால், அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதனால் அவ்வப்போது வாக்குவாதம் முற்றி டிரைவர்கள் கையில் உருட்டுக்கட்டைகளுடன் ஒவ்வொரு வண்டியையும் மறித்து வருகின்றனர்.

இந்நிலையில், காரைக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து, அரியக்குடி, நேமத்தான்பட்டி, கோட்டையூர் உள்ளிட்ட சுற்றியுள்ள பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு பேருந்துகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில், தற்போது 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பயணிகளிளை ஏற்றுவதில் இவர்களுக்கிடையே பல முறை பிரச்சினை ஏற்பட்டு தள்ளுமுள்ளு வரை சென்றுள்ளது. இந்த பிரச்சினை இப்போது பயணிகளையும் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்து விட்டது. ஒரு சில மினி பஸ்கள் பர்மிட் வாங்கிய வழித்தடத்தில் இயக்காமல், வசூலை மட்டுமே கருத்தில் கொண்டு எந்த வழித்தடத்தில் வருமானம் அதிகமாக உள்ளதோ, அந்த வழித்தடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளை ஒரே நேரத்தில் இயக்குகின்றனர்.

இதனால் பயணிகள் எந்த பேருந்தில் ஏறுவது என்ற குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்பட்ட மினி பஸ் அதற்குரிய வழித்தடத்தில் செல்லாமல், டி.டி.நகர் சர்ச் முதல் வீதி வழியாக பெரியார் சிலை அருகே வந்தது. இதனால், ஆத்திரமடைந்த அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் மினி பஸ் டிரைவர், மற்றும் கண்டக்டர் கையில் உருட்டுக்கட்டையுடன் பயணிகளுடன் இருந்த மினிபஸ் டிரைவரை அடிக்க பாய்ந்தனர்.

இதனால், அந்த பேருந்தில் இருந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். சம்பவம் குறித்து காரைக்குடி டிஎஸ்பி பிரகாஷ்க்கு தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து உடனடியாக வந்த வடக்கு காவல்துறையினர் உருட்டுக்கட்டை டிரைவர், கண்டக்டர் மற்றும் அனுமதி பெறாத வழித்தடத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் கண்டக்டரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

மினி பஸ்ஸை நம்பியுள்ள பயணிகள் பெரும்பாலானோர் இதனால் அடிக்கடி அவதிக்குள்ளாகி வருவதால் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ளவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க:"நெல்லை மாதிரி நடக்கக்கூடாது" - கோவை திமுக கவுன்சிலர்களுக்கு ரகசிய மீட்டிங்.. மேயர் தேர்தல் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details