தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்; பணிக்கு திரும்புவது எப்போது? - SAMSUNG LABOURERS PROTEST

சாம்சங் தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை இன்று சுமூகமான முடிவு பெற்ற நிலையில், போராட்டத்தை கைவிடுவது தொடர்பான முடிவை நாளை(அக் 16) அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உடனான பேச்சுவார்த்தை, சிஐடியு செளந்தரராஜன்
அமைச்சர் உடனான பேச்சுவார்த்தை, சிஐடியு செளந்தரராஜன் (Credits - E.V.Velu X Page, ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2024, 10:16 PM IST

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் சாம்சங் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைக்கு பின் சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "நான்கு அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்த்தை சுமூகமாக முடிந்தது. சில நல்ல முடிவுகள் கிடைத்தது. நாளை எங்கள் சங்கப்பேரவை கூட்டத்திற்கு பின் நல்ல முடிவு எடுக்கப்படும். சங்கப் பதிவினை பொறுத்தவரையில் நீதிமன்ற முடிவிற்கு கட்டுப்படுவோம். நிர்வாகம் எங்களுடன் பேச வேண்டும் என்று சொன்னோம். அது தற்பொழுது நல்ல முறையில் உள்ளது.

நாளை போராட்டத்தை கைவிடுவதாக சங்கப்பேரவை கூட்டத்தில் முடிவெடுத்தால், நாளை மறுநாளே பணிக்கு திரும்புவோம். எங்கள் கோரிக்கை கேட்கமாட்டோம், பேசமாட்டோம் என இருந்த நிர்வாகம், இப்போது அரசின் முயற்சி, அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தைக்கு பின் நல்லமுறையில் உள்ளது.

சௌந்தரராஜன் பேட்டி (credits - ETV Bharat Tamilnadu)

இன்று நடந்த பேச்சுவார்த்தையில் எங்களுக்கு திருப்தி. அரசின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. சங்கம் பதிவு என்பதற்கு நாங்கள் கையேந்தவில்லை. நீதிமன்றம் சொல்வதை கேட்போம். நாளை காஞ்சிபுரத்தில் 11 அல்லது 12 மணிக்குள் நடைபெறும் எங்கள் சங்கப்பேரவைக் கூட்டத்திற்கு பின் போராட்டம் தொடர்பான முடிவினை அறிவிப்போம்" என்றார்.

இதையும் படிங்க :முடிவுக்கு வந்தது சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்! அமைச்சர்கள், சிஐடியு-க்கு முதல்வர் பாராட்டு

பின்னர் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "தொழிலாளர் நலனுக்காக பாடுபவர் நம் முதலமைச்சர். சாம்சங் தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்குமிடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு 7-8 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். ஒரு மாதம் 6 நாட்கள் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு முன் தொழில்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும், போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இரு தினங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிறுவன அலுவலர்கள் தொழிலாளர் உடன்பாடு ஏற்பட்டது. நாளையே வாபஸ் பெற்று நாளை மறுநாள் பணிக்கு திரும்புவதாக கூறியுள்ளார்கள்.

மீண்டும் பணிக்கு திரும்பும் போது பழிவாங்கும் நடைவடிக்கைகள் எடுக்க மாட்டோம் என்று நிர்வாகமும், தொழில் அமைதி மற்றும் பொது அமைதி வேண்டி பணிக்கு திரும்புவதாகவும் தொழிலாளர்கள் கையெழுத்து இட்டுள்ளார்கள்.

காவல்துறை தொழிலாளர்கள் மீது வழக்கு போடவேண்டும் என்று நினைக்கும் அரசல்ல. தொழிலாளர் நலன் காக்கும் அரசு. தொழிலாளர்கள் நலனைக்காக்க வேலைவாய்ப்பினை உருவாக்கதான் தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடு சென்றார். சாம்சங் பிரச்னையால் கூட்டணியில் நெருடல் இல்லை.

கூட்டணி கட்சித் தலைவர்கள் எல்லாரும் எங்களிடம் பேசினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு போடப்பட்டது. அங்குள்ள சூழலை கருத்தில் கொண்டு சட்டம் ஒழுங்கினை பேண எடுத்த நடவடிக்கை அது. இது குறித்து அரசு பின்னர் முடிவு எடுக்கும்" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details