சென்னை: சாம்சங் தொழிலாளர்கள் ஊதியம் உயர்வு, தொழிற்சங்கம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி செப்.9ஆம் தேதியில் இருந்து போராட்டம் நடத்தி வந்தனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டிஆர்பி ராஜா, சி.வி.கணேசன் ஆகியோர் இவ்விகாரத்தை கையாள உத்தரவிட்டிருந்தார்.
இச்சூழ்நிலையில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் 15 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:
- நிறுவனம், பணியாளர் குழுவுடன் கலந்தாலோசித்து, ஊதியத்தினை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்தும்
- ஒரு இடைக்கால சிறப்பு ஊக்கத்தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்கப்படும். இது அக்டோபர் 2024 முதல் மார்ச் 2025 வரை நடைமுறையில் இருக்கும்
- இந்த சிறப்பு ஊக்கத்தொகை 2025-26 நிதியாண்டுக்கான வருடாந்திர ஊதிய உயர்வுடன் சேர்த்து கணக்கிடப்படும்
- தற்பொழுது உள்ள 5 வழித்தடங்களில் இருந்து குளிரூட்டப்பட்ட பேருந்துகளின் இயக்கம் அடுத்த ஆண்டுக்குள் 108 வழித்தடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்
- தொழிலாளர்களின் குடும்ப நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை வருடத்திற்கு 4-ல் இருந்து 6ஆக உயர்த்தப்படும் ஒவ்வொரு நிகழ்விலும் பங்கேற்கும் குடும்பத்திற்கு சுமார் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பரிசு வழங்கப்படும்
- பணியில் இருக்கும் தொழிலாளர் மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்தினரின் உடனடித் தேவைக்காக, ரூ.1 லட்சம் கூடுதல் உதவித் தொகையாக வழங்கப்படும்
- கம்பரஸர் கட்டடத்தில் ஒரு புதிய மருத்துவ அறை நிறுவப்படும்
- நிறுவனத்தின் கேண்டீனில் வழங்கப்படும் உணவு வகைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும், உணவுப்படி உயர்த்தி வழங்கப்படும்
- தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களின் ஓய்வறைகள் மேம்படுத்தப்படும். மேலும், பழுதடைந்த லாக்கர்கள் மாற்றப்படும்
- தொழிற்சாலை கட்டிடங்களுக்கு இடையில் செல்லும் பாதைக்கு கூரை அமைத்துத் தரப்படும்
- தொழிலாளர்களுக்கு விடுப்பு உயர்வு: திருமணம் செய்யும் தொழிலாளர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். முதல் மற்றும் 2வது குழந்தையின் பிறப்புக்கான தந்தையர்களுக்கு மகப்பேறு (ஆண் தொழிலாளர்களுக்கு) விடுப்பு மூன்றிலிருந்து 5 நாட்களாக உயர்த்தி அதிகரிக்கப்படும். பணியாளர் குழுவுடன் கலந்தாலோசித்து விடுமுறை எண்ணிக்கையில் மேலும் மாற்றங்கள் செய்யப்படும்
- தொழிலாளரின் குழந்தை பிறப்பிற்கு ரூ.2,000 பரிசாக வழங்கப்படும்
- தொழிலாளர்களின் பணிச்சூழல் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பொருட்டு, “MD's People First Promise,” என்ற திட்டம் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும்
- தொழிலாளர்களின் கருத்துக்களை தொடர்ந்து கண்டறிய குறை தீர்ப்பு மையம் மேம்படுத்தப்படும்
- மேற்கண்டவை தவிர, தொழிலாளர்களின் கூடுதல் கோரிக்கைகளையும், பணிச்சூழலில் மேம்பாடுகள் செய்யவும், தொழிற்சாலையில் செயல்படும் தொழிலாளர் குழுவுடன் விவாதித்து, உடனுக்குடன் தீர்வு காணப்படும்