தருமபுரி:அதியமான்கோட்டை அருகே உள்ள முண்டாசு புறவடை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலச்சந்தர்-பிரியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மற்றும் ஆறு வயதில் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வீட்டிலிருந்த குழந்தைகளை மர்ம நபர்கள் கடத்த முயற்சித்து, வீட்டின் வெளிப்புறம் உள்ள பாறை மீது இரு குழந்தைகளையும் மோதச்செய்து கொலைச்செய்து விட்டு மர்ம நபர் தப்பி ஓடியதாகக் கூறப்பட்டது..
இந்த தாக்குதலில் மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில் மற்றொரு சிறுவன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அதியமான்கோட்டை போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சிறுவனின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் உண்மையில் கடத்தலா அல்லது முன்விரோத கொலையா என்ற கோணத்தில் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிறுவன் கொலை வழக்கில் வெங்கடேஷ் என்பவரிடம் போலிசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், கொலை செய்தது வெங்கடேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும், போலீசாரின் தீவிர விசாரணையில், ஒரு தலை காதலால் இந்த கொலை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விசாரணையில், குழந்தையின் தாய் பிரியா மீது வெங்கடேஷிற்கு நீண்ட நாட்களாக ஒருதலைக் காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பிரியாவின் திருமணத்திற்கு முன்பே வெங்கடேஷ் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால், பிரியாவிற்கும் பாலச்சந்தருக்கும் திருமணம் நடந்த நிலையில் வெங்கடேஷ் தொடர்ந்து காதலித்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.