சென்னை:நடிகை கஸ்தூரி தனியார் தொலைக்காட்சி ஒன்றில், நவம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில், “இட ஒதுக்கீடு வந்த பின்னர்தான் லஞ்ச லாவண்யம் மலிந்துவிட்டது. இட ஒதுக்கீட்டினால் அரசுப் பணிக்கு வந்தவர்கள் செய்த ஊழல்களால் பல்வேறு வகைகளில் சொத்துக்களை சேர்த்துள்ளனர்,” என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தமிழ்நாட்டிலுள்ள அரசு ஊழியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உண்மைக்குப் புறம்பான அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இட ஒதுக்கீட்டினால் அரசுப் பணிக்கு வந்த ஊழியர்கள் மீது கூறியுள்ள நடிகை கஸ்தூரிக்கு, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தலைமைச் செயலக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 1967-இல் பேரறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர்தான், தந்தை பெரியாரின் கனவினை நனவாக்கும் விதமாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மற்றும் பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி விடியலைத் தந்தது.
தமிழ்நாட்டில் ஆட்சி அரியணையில் திராவிடக் கட்சிகள் யார் இருந்தாலும், இடஒதுக்கீட்டினை பாதுகாப்பதில் சமரசமின்றி செயல்பட்டுள்ளார்கள். அதிலும், குறிப்பாக 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை உத்தரவாதப் படுத்துவதற்காக இந்திய அரசியலமைப்பில் உரிய பாதுகாப்பினையும் திராவிடக் கட்சிகள் தான் செய்துள்ளன என்பது வரலாறு.
இதையும் படிங்க:“தெலுங்கு மன்னர்கள் படம் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும்”.. கஸ்தூரி மீது தேனியில் பெண்கள் புகார்!
பல்லாயிரம் ஆண்டுகளாக சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தற்போது பொருளதார ரீதியாக முன்னேறிக் கொண்டிருப்பதை பார்த்து காழ்ப்புணர்ச்சி கொண்ட நடிகை கஸ்தூரி, இடஒதுக்கீட்டின் மூலமாக அரசுப் பணிக்கு வந்த ஊழியர்களின் மீது விஷத்தையும், வன்மத்தையும் கக்கி இருக்கிறார். ஊழல், லஞ்ச லாவண்யம் என்பது இட ஒதுக்கீட்டிற்குப் பின்னர்தான் தமிழ்நாட்டு வரலாற்றிலேயே காலூன்றியது போல உயர் வர்ண திமிரோடு பேசியுள்ளார்.
ஆட்சிக் கட்டிலில் யார் இருந்தாலும், மாநில மற்றும் ஒன்றிய அரசின் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாட்டு அரசு ஊழியர்களின் பங்கு அளப்பரியது. இதற்கு சாட்சியாக திட்டங்களை தீட்டுவதிலும், செயல்படுத்துவதிலும், அத்திட்டங்கள் உரிய பயனாளிகளுக்கு சேரும் வகையிலும் செயலாற்றி ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் துறை வாரியாக வழங்கும் பல்வேறு விருதுகளை தமிழ்நாடு அரசு பெற்று வருகிறது.
சமூக நீதிக்கு எதிராகவும், இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவும் அரசுப் பணியில் இருக்கும் பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மற்றும் பட்டியலின மக்களை, நாட்டை கரண்டும் ஊழல் பேர்வழிகள் என்ற சாயலில் பேசியுள்ள நடிகை கஸ்தூரி மீது தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்