சென்னை:சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபேற்றது. அதில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
பார்வையாளர்களின் வேலை என்ன?: 234 தொகுதி பார்வையாளர்களும் அரசின் திட்டம் அந்த தொகுதியில் எப்படி சென்றுள்ளது. அந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட மக்கள் ஆதரவு பெற்ற தகுந்த வேட்பாளர்கள் யார் என்பதையும் திமுக தலைமையிடம் அறிவிப்பார்கள்.
திட்டங்கள் மூலம் வாக்கு: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மாணவ - மாணவியருக்கான மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களின் பலன்களை பெண்கள், இளைஞர்களிடம் எடுத்துக் கூறுவது. சிறுபான்மையினர், தலித் வாக்குகளை தக்க வைப்பதை உறுதி செய்வது, போன்ற நடவடிக்கைகள் மூலம் 2026ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க வேண்டும் என திமுக மும்முரம் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
திமுகவின் இலக்கு 200 தொகுதிகள்:இந்நிலையில் தான் தொகுதி பார்வையாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றுகையில், “சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அந்த தேர்தலிலும் நூற்றுக்கு நூறு வெற்றியை பெறவேண்டும். நம்முடைய இலக்கு 200 தொகுதிகள். அதற்கான உழைப்பை, நீங்கள் இன்றிலிருந்தே தொடங்க வேண்டும்.
வெற்றியை உறுதிசெய்ய வேண்டும்: அதற்காகத்தான் இப்போதே 234 தொகுதிகளுக்கும் தொகுதிப் பார்வையாளர்களை நியமித்துள்ளோம். புதிதாக பொறுப்பேற்றுள்ள அனைத்துத் தொகுதிப் பார்வையாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். நாம் வெற்றி பெறுவதை உறுதிசெய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு. நீங்கள் அனைவரும் இணைந்து ஆலோசனைப்படி பணிகளைத் தொடங்க வேண்டும்.
தனிப்பட்ட முறையில் எந்தப் புகாரும் வரக்கூடாது:உங்களுடைய பணிகளில் ஏதாவது உதவி தேவைப்பட்டாலோ, இல்லை எதாவது சந்தேகம் இருந்தாலோ தலைமைக் கழகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் யார் மேலும் தனிப்பட்ட முறையில் எந்தப் புகாரும் சொல்ல முடியாத அளவிற்குப் பணியாற்றுங்கள்.