சென்னை:மக்களவை தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க வரும் மார்ச் 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இன்றைக்கு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நிதி நிலை குறித்த பல விளக்கங்களை அந்தந்த துறையின் அதிகாரிகள் தெளிவாக எடுத்துச் சொல்லி உள்ளனர்.
அனைத்து கட்சி கூட்டம்:அது மட்டும் இன்றி முக்கியமான ஒரு முடிவு எடுத்திருக்கின்றோம். அதற்காகத்தான் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படுகிறது. தமிழ்நாடு இன்றைக்கு மிகப்பெரிய உரிமை போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே வரும் 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும். அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கும் 40 கட்சிகளை அழைக்க முடிவு செய்து உள்ளோம். அரசியல் கட்சிகளுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட உள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில், தென்னிந்தியாவில் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்குகிறது. அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் முதன்மையாக இருக்கும் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதை குறைக்கும் அபாயம் எழுந்துள்ளது. 2026ஆம் ஆண்டு மக்களவை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது.
தொகுதிகள் எண்ணிக்கை குறையும்:மக்கள் தொகையை கணக்கிட்டுத்தான் செய்யப்படுகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்தியாவின் இலக்கு. அந்த இலக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக வெற்றிகரமாக குடும்ப கட்டுப்பாடு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்கள் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முன்முயற்சிகள் மூலம் தமிழ்நாட்டில் சாதித்திருக்கின்றோம். தமிழ்நாட்டில் மக்கள் தொகை குறைவாக இருக்கின்ற காரணத்தால் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க:அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
நாடு முழுவதும் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரித்தால் தமிழ்நாட்டில் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் சூழல் ஏற்படும். அப்படி தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாடுக்கு 39 எம்பிக்கள் இருக்க மாட்டார்கள். 31 எம்பிக்கள்தான் இருப்பார்கள். நாட்டில் ஒட்டு மொத்த எம்பிக்கள் எண்ணிக்கையை உயர்த்தி அதற்கு ஏற்ப பிரித்தாலும் தமிழ்நாட்டுக்கு இழப்பு ஏற்படும். நமக்கான பிரதிநித்துவம் குறைந்து விடும். அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதநிதித்துவம் கிடைக்கும். இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படுகிறது. இது உறுப்பினர் எண்ணிக்கையை மட்டும் குறித்த கவலை அல்ல. மாநிலத்தின் உரிமையை சார்ந்தது என்பதை மறந்து விடக் கூடாது.