கோயம்புத்தூர்:கோவை உக்கடம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்லக் கூடிய பிரதான சாலைகளான கரும்புக்கடை, ஆத்துப்பாலம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வந்த நிலையில், ஆத்துப்பாலம் - உக்கடம் இடையேயான சாலையிலும் மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன் இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆத்துபாலத்தில் இருந்து உக்கடம் வரை சுமார் 3.8 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.481.95 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த கட்டுமான பணிகள், கடந்த 2018-ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட நிலையில், மேம்பால பணிகள் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து கரோனா முடிந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளாக மேம்பாலம் பணிகள் வேகமாக நடைபெற்று, முடிவுற்றது. இந்நிலையில் இந்த உக்கடம் மேம்பாலத்தினை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பொதுமக்கள் பயன்பட்டிற்காக திறந்து வைத்தார். பின்னர் அப்பாலத்தின் வழியாகச் சென்று அதனை பார்வையிட்டார்.