கோயம்புத்தூர்:தமிழ் புதல்வன் திட்டம், உக்கடம் - ஆத்துப்பாலம், மேம்பாலம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தடைந்தார். பந்தய சாலை பகுதியில் உள்ள கோவை அரசு கலைக்கல்லூரியில், அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சுமார் 470 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட உக்கடம் - ஆத்துப்பாலம் இடையிலான உயர்மட்ட மேம்பாலத்தை அவர் திறந்து வைத்தார். பின் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் இந்திரா நகர் பகுதிக்கு சாலை மார்க்கமாக வருகை தந்த முதலமைச்சர், அங்கு தனியார் நிலம் ஒன்றில் திமுக சார்பில் 8 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார்.
மேலும் அதே வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, அறிவு சார்ந்த நூலகத்தையும், 106 அடி உயர பிரம்மாண்டக் கொடி கம்பத்தையும் திறந்து வைத்தார். அறிவு சார் நூலக கட்டிட வளாகத்தின் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் அன்பழகன் ஆகியோரது படங்கள், திமுக அரசின் காலை உணவு திட்டம், மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பேருந்து திட்டம் உள்ளிட்டவை குறித்த சாதனை விளக்க புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.